கொரோனா தடுப்புக்காக ரூ.1 கோடியை முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. தடுப்பூசி செலுத்தும் பணியையும், இதர தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதனையடுத்து தொற்று தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொதுநிவாரணநிதிக்கு நிதி வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. இதனையடுத்து திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் வடிவேலு, ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் ரூ.1 கோடியை வழங்கியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடார் பேரவை, நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளோம். இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். எம் ஜி ஆர் , ஜெயலலிதா நினைவிடங்கள் போல் காமராஜர் நினைவிடம் புதுப்பொலிவுடன் அவர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கண்காட்சி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி கடந்த 2,505 பேர் கொரோனா தொற்றல் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். 3,058 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 25,23,943 ஆக அதிகரித்துள்ளது. 24,59,223 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 33,502 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 31,218 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 282 பேரும், ஈரோட்டில் 187 பேரும், தஞ்சாவூரில் 185 பேரும், சேலத்தில் 162 பேரும், சென்னையில் 160 பேரும் திருப்பூரில் 148 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







