சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டப திறப்பு விழா நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும், கருங்குளத்தில், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் திறந்த ஜீப்பில் ஒன்றாக பயணித்தபடியே வழிநெடுகிலும் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கையசைத்தபடியே பயணித்தனர்.
இதையடுத்து கோவிந்தபேரி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும்,
பி.ஹெச்.பாண்டியனின் சிலையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில்
பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகராக பதவி வகித்தபோது, அந்த பதவிக்கே கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச்.பாண்டியன் எனத் தெரிவித்தார். பி.ஹெச்.பாண்டியன் அதிமுகவிற்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.







