100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நடிகர்கள், திரைப்பட உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் நன்றியினை தெரிவித்துள்ள அவர், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







