உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
கடந்த 22-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பின்னர் தமிழ்நாடு திரும்பிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதற்காக அரியலூர், தஞ்சாவூர் என பல்வேறு ஊர்களுக்கு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனிடையே வரும் 30ஆம் தேதி வரை திருமாவளவனை சந்திக்க வரவேண்டாம் என கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே நேற்று திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்தார். இதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருமாவளவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள அதிமுக தமிழ்நாட்டில் தங்கள் தலைமையில் கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கூட்டணியில் உள்ள தலைவரை எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.







