அதிமுகவில் இருந்த வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பியுள்ளார். அவரது வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்கம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நியூஸ்7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்திற்காக அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வந்துள்ளோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நூறாண்டுகளைக் கடந்து வெற்றி நடை போடும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கனவு கண்டார். அந்த கனவை நனவாக்கும் வகையில் உறுதிமொழியை ஏற்க உள்ளோம்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டது. பல்வேறு தலைவர்கள் தனித்தனி கட்சிகளை அமைத்தனர். ஆனால் ஜெயலலிதாவின் வெற்றிக்கு
பின் தாக்குப் பிடிக்க முடியாமல், அனைவரும் ஒன்றிணைந்தனர். இயக்கம் புத்துருவாக்கத்தையும் மீட்டுருவாக்கத்தையும் பெற்றது. ஜெயலலிதா மறைவிற்கு பின் நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்ற நம்பிக்கை நாடு முழுவதும் உள்ளது.
ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம். தொடர்ந்து அவரது கனவை நனவாக்கும் வகையில், நாடாளுமன்ற தேர்தலில் அதிக வெற்றியும், சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் கைப்பற்ற பாடுபடுவோம்.
பழுத்த இலை உதிர்ந்தால் கூட இரண்டு இலை துளிர்க்கும் என்பது இயற்கை நடத்தும்
பாடம். தகுதி உள்ளது எதுவோ அது தப்பிப் பிழைக்கும். எப்போதும் வெற்றிடமாக இருக்காது. அந்த வெற்றிடத்தை காற்று நிரப்பும். அதிமுகவில் இருந்த வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பியுள்ளார். அவரது வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்கம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும். அரசியலில் நிரந்தரமான எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. ஓபிஎஸ், சசிகலா, எடப்பாடி, டிடிவி இணைப்பு பற்றி காலம் தான் தீர்மானிக்கும். அரசியலில் வெற்றிக்கான சூத்திரம் எதுவோ, அது அதுவாகவே இணைந்து கொள்ளும். தொண்டர்களின் எண்ணம் எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்
என்பதுதான்” என்றார்.







