இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கொலை சம்பவம் தொடர்பாக இபிஎஸ் கொண்டு வந்த அவசர தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் தொடக்கமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு இரங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவசர கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இச்சம்பவம் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி கொலை சம்பவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
கிருஷ்ணகிரியில் கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் மார்ச் 21ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கே ஆர் பி அணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிமுக கிளை செயலாளர் உள்ளிட்ட மூவர் ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில் கல்லூரியில் படித்து வரும் சரண்யாவை, ஜெகன் காதலித்து பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி ஜனவரியில் கோவையில் வைத்து திருமணம் செய்துள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை சங்கர் இந்த கொலை சம்பவத்தை செய்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதிமுக கிளை செயலாளர் என காவல்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நீதியை காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தவிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் அதிமுக கிளைச் செயலாளர் என முதலமைச்சர் சொன்னதால் அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் ” காவல்துறை கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தான் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சியின் குரலுக்கு மதிப்பளித்து, அது தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறோம்” என துரைமுருகன் தெரிவித்தார்.







