குரங்கம்மை நோய் பரவல் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை வைரசானது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட 79க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்தியாவில் கடந்த 14ம் தேதி கேரளாவை சேர்ந்த ஒருவர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், டெல்லி மற்றும் தெலுங்கானாவிலும் தலா ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியானது. இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், தற்போது இந்தியாவில் 5 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பே குரங்கம்மை நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களிடம் விமான நிலையங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக 15 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தற்போது நோய் தொற்று பரவல் நிலைமை கட்டுக்குள் உள்ளது. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும், யாருக்காவது குரங்கம்மை காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் தாமாக முன் வந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும், இதைப்பற்றி கவலைப்படவும், மறைக்கவும் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.








