தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக மார்கரெட் ஆல்வா கூறி இருக்கும் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்நிலையில், அவர் தனக்கு ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, பாஜகவில் உள்ள தனது நண்பர்களுடன் தொலைபேசியில் தான் பேசியதாகவும், இதையடுத்து, தனது தொலைபேசியில் இருந்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தனது தொலைபேசி எண் தனக்கு பழையபடி மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிஎஸ்என்எல் / எம்பிஎன்எல் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ள அவர், அவ்வாறு மீண்டும் கிடைக்குமானால் இனி பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் கட்சிகளில் உள்ள எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் பேச மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
தனது தொலைபேசி இவ்வாறு முடக்கப்பட்டதற்கு மத்திய அரசிற்கு இருக்கும் அச்சமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், அச்சம் ஜனநாயகத்தை கொல்லும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்கரெட் ஆல்வாவின் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது என தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உறுதியாக இருக்கும்போது, இதுபோன்ற செயல்களில் ஏன் ஈடபடப் போகிறோம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, மார்கரெட் ஆல்வாவின் புகார் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிஎஸ்என்எல் சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள மார்கரெட் ஆல்வா, தற்போது தனது தொலைபேசியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தனது புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.










