ஜெயிலர் வீட்டுக்குத் தீ – குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த…

கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து
வருகிறார். கடந்த சில தினங்களாக மத்திய சிறைச்சாலையில் தீவிர சோதனைகள் செய்து செல்போன் மற்றும் சார்ஜர் தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்தார். மேலும், கைதிகளை கடுமையாக எச்சரிக்கை செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி ஜெயிலர் மணிகண்டன் தஞ்சாவூருக்கு சென்றிருந்த நிலையில் நேற்று அதிகாலை மணிகண்டன் வீட்டில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக அக்குடும்பத்தினர் உயிர்தப்பினர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறைத் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின்படி ஆய்வாளர் உதயகுமார், டெல்டா பிரிவு உள்ளிட்ட 3 தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறைச் சாலையில் உள்ள கைதிகள் யாரேனும் கூலிப்படை ஏவி இந்த சம்பவத்தில் ஈடுபட வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் பகுதியில் கூலிப் படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அடுத்து விசாரணைக்காக அங்கு
விரைந்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.