இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி, அசால்ட்டாக அரைசதம் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. கே.எல்.ராகுல் 129 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 391 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் ஜோ ரூட் 180 குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் (5 ரன்), ரோகித் சர்மா (21 ரன்), விராத் கோலி (20 ரன்), புஜாரா (45 ரன்), ரஹானே (61 ரன்) ஜடேஜா (3 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும் இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரிஷப் பண்ட் 22 ரன்களிலும் இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் நிலை சிக்கலானது. ஆனால், அடுத்த வந்த முகமது ஷமியும் பும்ராவும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்க தொடங்கினர்.
இவர்களை பிரிக்க இங்கிலாந்து வீரர்கள் கையாண்ட அனைத்து முயற்சியயும் அசால்டாக முறியடித்தனர். அவர்களுக்கு அருமையாக தண்ணி காட்டிய ஷமி, அரைசதம் விளாசினார். இது அவருக்கு இரண்டாவது டெஸ்ட் அரை சதமாகும். இதில் 5 பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடக்கம்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. ஷமி 52 ரன்களுடனும் பும்ரா 32 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.









