இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதி முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை கருத்தில் கொண்டு ஜூன் 21ம் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது. ஆனால், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 21க்கு பதிலாக, ஜூலை 19ம் தேதி முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர். இதனை தற்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்துள்ளார். ஜூலை 19ம் தேதி முதல் மாஸ்க் அணிவது கட்டாயமல்ல என தெரிவித்த அவர், சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பார்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், கொரோனா தொற்று முழுமையாக நீங்கவில்லை என எச்சரித்த அவர், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை இங்கிலாந்து அரசு தொடர்ந்து செயல்படுத்தும் எனவும், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 63.4% பேர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு சராசரியாக 30,000ஆக உள்ளது. இந்த சூழலில், அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது ஆபத்தான முடிவு என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








