துறைமுக வைப்பு நிதி முறைகேடு; 11 பேர் கைது

சென்னை துறைமுகத்தின் வைப்பு நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நிரந்தர வைப்புக் கணக்கில்…

சென்னை துறைமுகத்தின் வைப்பு நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நிரந்தர வைப்புக் கணக்கில் 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. பணம் போடப்பட்ட 3 நாட்களுக்குப் பின்னர் கணேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் என அறிமுகம் செய்துகொண்டு, பல்வேறு ஆவணங்களை வங்கியில் தாக்கல் செய்து, நிரந்தர வைப்பு கணக்கில் இருக்கும் 100 கோடியை இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆவணங்களை பரிசீலனை செய்த வங்கி நிர்வாகம், தலா 50 கோடி ரூபாயாக இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்றியது. மேலும், அந்த நடப்பு கணக்குகளிலிருந்து 45 கோடி ரூபாயை 34 வங்கிக் கணக்குகளுக்கு அவர் மாற்றியுள்ளார். இது குறித்து துறைமுக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு 18 பேரைக் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய சுடலை முத்து, விஜய் ஹெரால்ட், ராஜேஷ் சிங், கணேஷ் நடராஜன், மணிமொழி உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.