இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாய்மரபடகு பயணத்தை மேற்கொண்டு பெண் ராணுவ அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை முதல் விசாகப்பட்டினம் வரை பெண் இராணுவ அதிகாரிகள் பாய்மர படகு முதல் பயணம் செய்தனர், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 15 ஆம் தேதி இந்தப் பயணத்தை துவக்கி வைத்தார். 1700 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பயணத்தை 10 பேர் அடங்கிய பெண் இராணுவ அதிகாரிகள் 8 நாட்களில் முடித்து இன்று காலை சென்னை திரும்பினார்கள்.
துறைமுகம் திரும்பிய அவர்களை சென்னை துறைமுக துணை தலைவர் பாலாஜி அருண்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்று அவர்களின் இந்த செயலை பாராட்டி நினைவு பரிசை வழங்கினர். வீரர்கள் 30 நாட்கள் மும்பை மற்றும் சென்னையில் பயிற்சி மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் 20ஆம் தேதி சென்னை திரும்ப வேண்டிய வீரர்கள் கடலில் காற்று மாறுபாடு காரணமாக முன்னோக்கி வர முடியாமல் இருந்ததால் இரண்டு நாட்கள் தாமதமாக வந்ததாக தெரிவித்தனர். இந்திய வரலாற்றில் பெண் இராணுவ அதிகாரிகள் நெடுந்தொலைவு பாய்மர படகு பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.








