பெண் ஒருவரின் கோரிக்கைக்கு ஏற்ப விமான நிறுவனத்திற்கு சாட்ஜிபிடி எழுதிய மின்னஞ்சல், நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட OpenAI-ன் ChatGPT, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சாட்ஜிபிடி என்றழைக்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் (Chatbot), நாம் வைக்கும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு, பதில்களை கொடுக்கும் ஒரு விரிவான மொழிக் கருவியாகும். இது, தொழில்நுட்பத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியின் புதிய நிலைகளுக்கு, நம்மை தயார்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சாட்ஜிபிடி-யை பயன்படுத்தி செரி லுவோ என்பவர், விமான நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இன்ஸ்டாகிராமில், இதுகுறித்த வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், ”நாங்கள் விமான நிலையத்தில் இருந்தபோதிலும், எங்களது விமானம் 6 மணி நேரம் தாமதம் ஆவது பற்றி எங்களுக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. மேலும் எங்களுக்கு முன்னுரிமையாளர்களுக்கான ஓய்வறையும் வழங்கப்படவில்லை. எனவே, எங்களது நிலை குறித்த மிகவும் உறுதியான மின்னஞ்சல் ஒன்றை விமான நிறுவனத்திற்கு எழுது” என்று செரி, சாட்ஜிபிடியிடம் கேட்கிறார்.
இதையும் படியுங்கள் : ’இந்தியாவின் மிகப்பெரிய தட்டு’க்கு நடிகர் சோனு சூட்டின் பெயர்!
உடனடியாக, செரி முன்வைக்கும் கோரிக்கைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் உட்படுத்தி, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாட்ஜிபிடி, மின்னஞ்சலை எழுதுகிறது. மேலும், விமான தாமதங்கள் மற்றும் பயணிகளின் முன்னுரிமைகளை, விமான நிறுவனம் எவ்வாறு கையாள்வது போன்ற எதிர்கால மேம்பாடுகளையும் அந்த மின்னஞ்சலில் இணைக்கிறது.
செரி லுவோ, டிசம்பர் மாதம் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 54,000க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைக் கண்ட பலரும், சாட்ஜிபிடி பற்றிய நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல சாட்போட்கள், உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகின்றன. கூகுள் சமீபத்தில் பார்ட் எனப்படும் AI சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பிங் என்ற AI சாட்போட்டை வெளியிட்டது. சீன இணைய நிறுவனமான Baidu, தனது சாட்போட் மார்ச் மாதம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.








