10 வீடுகளுக்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ₨ 8-ல் இருந்து ₨5.50 ஆக குறைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2-வது நாளாக இன்றும் கள ஆய்வு ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாகப் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தேன். முதல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அரசு மாணவர் விடுதிகளை சரியான முறையில் செயல்படுத்துதல் போன்றவற்றை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இது மக்களுக்காக இயங்கும் அரசு. அவர்களை நோக்கி செல்லும் ஒரு முயற்சி தான் இந்த கள ஆய்வு. நேற்றைய தினம் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதனை உங்களிடம் கூறியிருப்பார்கள். அதனை மேலும் செம்மையாக செயல்படுத்த வேண்டும்.
இனிவரும் காலங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் சென்னை – நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது.
மேலும், சிறு அடுக்குமாடிக் குடியிருப்பு, பொதுக் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுகிறது. அதாவது 10 வீடுகளுக்கும் குறைவாக 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.







