கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற கோரி திமுக தொடர்ந்த வழக்கில் 8 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1975 முதல் 1977வரை அமல்படுத்தப்பட்ட அவசர நிலை காலத்தில் மாநிலத்தின் வசம் இருந்தவை பல மத்திய அரசின் வசம் சென்றடைந்தது. கல்வி, நீதி நிர்வாகம், காடுகளை நிர்வகிக்கும் பொறுப்பு, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு போன்றவை மாநில பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றம் கடும் விமர்சனத்திற்கு வித்திட்டது.
இந்நிலையில் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வன், அக்பர் அலி மூத்த பத்திரிகையாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில், கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராக வரம்பு மீறி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில் 8 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டுள்ளது.








