மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதையடுத்து தற்போது முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உடல் நலம் காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டெபாஸ்ரீ சவுத்ரி, சமூக நலத்துறை அமைச்சர் தவார்சந் கெலாட் ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
விரிவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் உட்பட பலர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் 43க்கும் மேற்பட்ட தலைவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தொழில் புரிவதற்கான தடைகளை களைந்தெறியவும் மத்திய நிதியமைச்சகம் வெளியிடும் அறிவிப்புகளை நிறைவேற்றுவதற்கும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் புதிய அமைச்சகம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







