அரசியல் முட்கள் நிறைந்த பாதை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் இன்று நடைபெற்றது. தொண்டு நிறுவனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முன்னதாக பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற போது நானே அவரை விமர்சித்துள்ளேன். இவ்வளவு பெரிய பொறுப்பை இவர் எப்படி செய்வார் என சந்தேகப்பட்டேன். ஆனால், அரசியல் வரலாற்றில் ஒரு சாமானியன், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் முதல்முறையாக இந்த பதவியில் அமர்ந்ததை பாராட்ட வேண்டும்.தான் ஒரு சிறந்த நிர்வாகி என ஒரே வருடத்தில் நிரூபித்து காட்டினார்” என்று புகழ்ந்தார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது, அது எனக்கு கிடைத்துள்ளது. திரைப்படத்தில் எளிதாக ஜொலித்து விடலாம்.அரசியலில் ஜொலிப்பது கடினம். அரசியல் முட்கள் நிறைந்த பாதை. தெருவில் நின்று,ஒவ்வொரு படியாக ஏறித்தான் இந்த இடத்திற்கு வர முடியும்” என்று தெரிவித்தார்.







