கொரோனா தொற்றின் அவசர நிலையை கருத்தில் கொண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7,564 பேரும், கோவையில் 2,636 பேரும், செங்கல்பட்டில் 2,670 பேரும், திருவள்ளூரில் 1,344 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கொரோனாவுக்கு 293 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19,508 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றின் அவசர நிலையை கருத்தில் கொண்டு இளம் மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் அவர், அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர்.
இன்றைய கொரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு, உடனடியாக அரசு மருத்துவ மனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக அரசின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து கூறியுள்ளார்.







