அமுல் பால் விவகாரத்தால் ஒட்டு மொத்த கர்நாடக மாநிலமே எரிமலை குழம்பாய் கொதிக்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பெரும் விவாத பொருளாகியுள்ளது இந்த விவகாரம். அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய தேர்தலில் அனல் கக்கும் விவாதங்கள் நடந்து வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து, கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமுல் பால் விற்பனைக்கு வரும் என்ற அறிவிப்பு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடனே காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா கொதித்தெழுந்து விட்டார். முன்பு கர்நாடகத்தின் விஜயா வங்கி, குஜராத்தில் ஆரம்பிக்கப்பட்ட பரோடா வங்கியுடனும், அதேபோல் கார்ப்பரேசன் வங்கி, யூனியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது குறித்து கூறிய சித்தராமையா, கர்நாடகத்தின் தனித்தன்மைகள் எல்லாம் மத்தியில் உள்ள பாஜக அரசால் அழிக்கப்படுகிறது என்றும், இப்போது குஜராத்தின் அமுல் நிறுவனத்திற்காக, கர்நாடகத்தின் நந்தினி நிறுவனத்தை ஒழித்து கட்ட சதிவேலை நடக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படியுங்கள் : PS2 படத்தின் ”சிவோஹம்” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது!
நந்தினி பால் கூட்டுறவு அமைப்பில் உள்ள சுமார் ஒரு கோடி விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அமுல் நிறுவனத்திற்காக, நந்தினியை நசுக்கும் திட்டத்திற்கு, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், மாநில பாஜகவும் ஆதரவளிக்கிறது என்று சித்தராமையா கூறினார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அமுல் வர்த்தக அளவை அதிகரிக்க திட்டமிட்டதை தங்கள் அரசு ஆதரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் தலைவருமான குமாரசாமியும், அமுல் நிறுவனத்திற்காக, நந்தினி நிறுவனத்தை பலிகடா ஆக்கும் முயற்சியை எதிர்த்து குரல் கொடுத்தார். கர்நாடகா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் அறிவித்தார்.
நந்தினி மற்றும் அமுல் விவகாரத்தில், கர்நாடக மாநில விவசாய அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள், பொது நல அமைப்புகள் நந்தினி நிறுவனத்திற்கு ஆதரவளித்ததுடன், அமுலுக்கு எதிராக போராடி வருகின்றனர். கர்நாடக பால் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பெங்களூர் ஹோட்டல்கள் கூட்டமைப்பு, அமுல் நிறுவன பொருட்களை மொத்தமாக தடை செய்துவிட்டு, இனி நந்தினி பால், பால் பொருட்களை மட்டுமே வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே, கடந்த வாரம் #SaveNandini என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டானது. அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் ட்வீட்களை தெறிக்க விட்டனர்.
பால் பொருட்கள் வர்த்தகர்களிடம் பேசும் போது, ஏற்கனவே அமுல் பால், தயிர், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகளை கர்நாடகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் விற்பனையை அனுமதித்தால், மெல்ல மெல்ல நந்தினி நிறுவனத்தை, அமுல் கபளீகரம் செய்துவிடும். மகாராஷ்டிராவில் மகானந், ஆந்திராவில் விஜயா போன்ற மாநில அரசு நிறுவனங்களை அமுல் வீழ்த்திய வரலாறு உண்டு. நந்தினி பால் சாதாரண வகை ஒரு லிட்டர் 39 ரூபாயாக உள்ளது. அமுலின் விலை 52 ரூபாயாக உள்ளது எனவும் கூறுகின்றனர்.
2022-23 ஆம் நிதியாண்டில் அமுல் நிறுவனத்தின் வர்த்தகம் 65 ஆயிரம் கோடி ரூபாய். நந்தினி நிறுவனத்தின் வர்த்தகம் 21 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டின் ஆவின் வர்த்தகம் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், வரிசையில் ஒரே பால் நிறுவனம் அமுல் என பாஜகவும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்புகிறார்களா என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. சுதாரித்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நந்தினிக்கு எதிரான நடவடிக்கையை மாநில அரசு அனுமதிக்காது என்றும், நந்தினி நிறுவனத்தை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில், ஒற்றை அறிக்கையால் மீண்டும் ஒரு முறை கர்நாடக மாநிலமே ஒன்று திரண்டுள்ளது என்றால் மிகையில்லை.
- ரா.தங்கபாண்டியன் , நியூஸ் 7 தமிழ்.