முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்புவில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி ஏவுகணை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். அவரின் அளப்பரிய தியாகத்தை கௌரவப்படுத்தும் வகையில் பாஜக ஆட்சியில் அவருக்கு குடியரசு தலைவர் பதவி தேடி வந்தது.
அந்த உயர்ந்த பொறுப்பை அடைந்த போதும் இளைஞர்கள் மாணவர்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். நாட்டில் உளள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா தலைநகர் சில்லாங்கில் உள்ள கல்லூரியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் மரணம் அடைந்தார். அவரது 8-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் பேக்கரும்பு கிராமத்தில் உள்ள நினைவிடம் மலர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.ஜே.அப்துல்கலாம் குடும்பத்தினர் ஜெய்னுலாவுதீன் மரைக்காயர், நஜிமா மரைக்காயர், சேக்தாவூத், சேக் சலீம், ஜமாஅத் தலைவர் அப்துல் ரகுமான் துவா ஓதி மலர் தூவி மரியாதை செய்தனர். கலாமின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.







