மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ, பொதுச்செயலாலர் வைகோ முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த அக்டோபர் 20-ம் தேதி மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கலாமா என்பது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 106 வாக்குகள் துரை வைக்கோவிற்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்குவதென்றால் நானே வழங்கி இருக்கலாம், தொண்டர்களின் விருப்பப்படி முடிவெடுப்பதற்கு இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை நியமித்துள்ளேன், முழுநேர கழகப் பணியை மேற்கொள்ள அவருக்கு அனுமதியளிக்கப்படுகிறது. சுற்றுப்பயணம் செல்லவும் துரை வைகோவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று தெரிவித்த்தார்.

மேலும் துரை வைகோ நியமித்ததில் வாரிசு அரசியல் இல்லை என்றும் தனக்கு இன்னும் வயதாகிவிடல்லை என்றும் மரணம் வரை அரசியில் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை செலுத்தினார். மேலும் மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வைகோ மற்றும் துரை வைகோ மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.







