தமிழ்நாட்டில் தொழிற்வளர்ச்சி இல்லாததால் ஏராளமானோர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் முன்னர் இருந்தது போல் தொழில் வளர்ச்சி தற்போது இல்லாததால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.  தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, 2023-ல் தேசிய நிறுவன தரவரிசையில்…

தமிழ்நாட்டில் முன்னர் இருந்தது போல் தொழில் வளர்ச்சி தற்போது இல்லாததால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 

தமிழ்நாட்டின் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, 2023-ல் தேசிய நிறுவன தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி உயர் கல்வியில் முதலிடத்தைப் பெற்ற சென்னை பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சவிதா பல்கலைகழகம் எஸ்.ஆர்.எம், பல்கலைகழகம், அண்ணா பல்கலைக்கழகம், ராமசந்திரா பல்கலைகழகம், ஏசிஎஸ் பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

அப்போது தரவரிசையில் இடம் பெற்றதற்கான முக்கிய காரணங்களை ஒவ்வொரு கல்லூரி பேராசிரியர்களும் LED திரையில் விளக்கம் அளித்தனர். இதனை அடுத்து ஆளுநர் ஆர்.என் ரவி மேடையில் பேசியதாவது:

தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தான் எனக்கு இங்கு இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்ற பல்கலைக்கழகங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை என்று தெரியவந்தது. அதை மாற்ற நினைக்கிறேன். 70 சதவீதம் மாணவர்கள் வரலாறு மற்றும் மனிதநேயம் தொடர்பான படிப்புகளை எடுத்துக் கொள்வதில்லை. மாணவர்கள் முதலில் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு தான் பல மாணவர்கள் தங்களுக்கு உரிமையான கல்வியை கற்க சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது.

தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் வளமை மற்றொரு ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாகாது. வேறு கலாச்சாரங்களை கண்டு நாம் ஒரே பார்வையில் நிற்கக்கூடாது. தமிழ் பல்கலைக்கழகம் தங்களுக்கான தளத்தில் தங்களது கலாச்சாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களும் அதிகமாக வெற்றி பெற்று உலகமெங்கும் சேவையாற்றும் நிலையில் தயாராக உள்ளன.

மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வேண்டும்.  மாணவர்கள் அதிகமாக கல்வி பயில பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது போதிய தொழிற்சாலை இல்லாத நிலை ஏற்படுவதினால் தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடையாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கின்றது. இதனால் தான் ஏராளமானோர் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் முன்னர் இருந்தது போல் தொழில் வளர்ச்சி தற்போது இருந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைத்திருக்கும். மற்ற நாடுகளை விட நாம் வேகமாக முன்னேறி செல்ல வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.