வறண்ட மேட்டூர் அணை – முழுமையாக வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது. காவிரி டெல்டா பகுதிகளின் ஜீவநாடியாக திகழ்ந்து வருகிறது மேட்டூர் அணை. இந்த அணையில்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது.

காவிரி டெல்டா பகுதிகளின் ஜீவநாடியாக திகழ்ந்து வருகிறது மேட்டூர் அணை. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி தொடங்கி ஜனவரி 28-ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்தி குறுவை,  சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும்.

மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி,  நீர் பரப்பு 152 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரியும்.  இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது.  மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் பொழுது அங்கு உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிவது வழக்கம்.

பிப்ரவரி 4-ம் தேதி 70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் , பிப்ரவரி 5- ம் தேதி 69 அடியாக குறைந்ததால் நந்தி சிலையின் தலை பகுதி வெளியே தெரிய தொடங்கியது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியில் இருந்து 49 அடியாக சரிந்தது.  இதனால் பண்ணவாடி நீர் தேக்க பகுதியில் மூழ்கி இருந்த 20 அடி உயரம் கொண்ட நந்தி சிலை அதன் பின்புறம் 10 அடி உயரம் கொண்ட ஜலகண்டேஸ்வர ஆலயத்தில் கோபுர முகப்புப் பகுதி வெளியே தெரிந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.