ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிக்கிறது: நடவடிக்கை எடுப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் உறுதி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு…

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அங்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து அங்குள்ள ஜிப்மர் மருந்தகத்தில் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஜிப்மர் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார் வந்ததை அடுத்து ஆய்வு செய்யப்பட்டது என்றார். மக்களுக்கு உரிய மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என விளக்கமளித்தார்.

வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள உள்நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்யப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மருந்துகள் வெளியில் வாங்க நோயளிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், ஜிப்மரில் பாராசிட்டாமல் மருந்து கூட இல்லாமல் இருப்பது வருத்தபபடக்கூடியது என்றார். அவை உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.