போதை இல்லாத தமிழகம் செயல்வடிவம் பெற வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முதலமைச்சரின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் போதை…

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முதலமைச்சரின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் போதை பொருள் விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். எனவே, புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

அதேபோல, மதுபானங்களால் ஏற்படும் போதையை ஒழிக்க தமிழக அரசு முன்வராதது ஏன்?. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட மனம் இல்லாததால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாது ஏன்?. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.