சமீபத்தில் அதிமுக பொதுக்குழு சலசலப்புடன் நடந்து முடிந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.வி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் ஒற்றைத் தலைமை குறித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனது. இது இபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொதுக்குழுவில், 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.
தொடர்ந்து கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும், அவர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமைதான் என்றும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சி.வி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அவரது தரப்பில் அ.தி.மு.க வழக்கறிஞர் பாலமுருகன் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த வழக்கறிஞர் பால முருகன், “சண்முகதிற்கு கடந்த சில தினங்களாக கொலை மிரட்டல் விடுத்து பல செய்திகள் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன. இதனால் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்துள்ளோம். புகாரை விசாரித்து அவர்களை கைது செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.








