‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும்’ எனும் திருக்குறள் குறிப்பிட்டு பத்திரிக்கையாளர் கோவி லெனின், நேற்று மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ மணற் சிற்பம் உருவான விதம் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுளார்.
பத்திரிக்கையாளர் கோவி லெனின் பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு கால செயல்பாடுகளை மக்களின் மனதில் பதியச் செய்வதற்கானப் பல வழிகள் இன்றைய தொழில்நுட்பத்தில் உண்டு. அதில், தனித்தன்மையுடன் கூடிய செயல்பாடு குறித்து தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏவுடன் ஆலோசித்தபோது, சட்டென ஒரு நொடியில் வெளிப்பட்டதுதான், மணற்சிற்பம். இந்தியாவின் அதிசிறந்த மணற் சிற்பக் கலைஞரும் தமிழ்நாட்டின் மீது தனிப் பற்றுக் கொண்டு திருவள்ளுவர், கருணாநிதி ஆகியோரை ஒடிசா கடற்கரைகளில் மணற் சிற்பமாக வடித்தவருமான பத்மஸ்ரீ விருதாளர் சுதர்சன் பட்நாயக்யை அழைத்து, சென்னை மெரினாவில் முதலமைச்சரின் ஓராண்டு காலச் சாதனைகளை மணற் சிற்பத்தில் வெளிப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பு பணியை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் நெகிழ்ச்சிப்பட அவர் தெரிவித்துள்ளார்.
மெரினா என்றதுமே தனக்கும் ஆர்வம் அதிகமானது என்று குறிப்பிடுள்ள அவர், மெரினா கடற்கரை, குடும்பம் குடும்பமாக மக்கள் கூடும் இடம், அந்த இடத்தில், ஓராண்டு கால சாதனைகளைக் கலை வடிவில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதாலும், மணற் சிற்பம் என்பது மக்களைக் கவரும் என்பதாலும் அதன் ஒருங்கிணைப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சுதர்சன பட்நாயக்கைத் தொடர்பு கொண்டபோது, “தமிழ்நாடு என இரண்டாவது வீடு” என அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதாக கோவி லெனின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முன்னெடுப்புகளை துவக்கிய பாஜக?’
மணற்சிற்பத்தை உருவாக்குவதற்கு முன்பான ஆயத்தப் பணிகளுக்கே இரண்டு நாட்கள் தேவைப்பட்டதாக தெரிவிக்கும் அவர், எல்லாப் பணிகளும் முடிவடைந்த நிலையில், 7-ஆம் தேதி விடிகாலை 4 மணிக்கு தனது அணியினருடன் மணற்சிற்ப பணியை, சுதர்சன் பட்நாயக் தொடங்கியதாகவும், மதியம் 1.30 மணிவாக்கில் அப்பணிகள் நிறைவு பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில், அரை வட்ட வடிவத்திற்குள் முதலமைச்சரின் உருவத்தை உருவாக்கி, அதில் ஒளிக்கதிர்களாக ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளில் முதன்மையானவற்றைப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கும் அவர், 9 அடி உயரம், 35 அடி நீளத்தில் மிகப் பெரிய மணற்சிற்பமாக இது அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இதுவரை பதவியில் உள்ள எந்த ஒரு முதலமைச்சரையும் மணற் சிற்பமாக வடிக்காத சுதர்சன் பட்நாயக், தமிழ்நாடு முதலமைச்சரை முதல் முறையாக வடிவமைத்திருந்தார் எனவும், அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘Dravidian Model’ என்ற ஆங்கில நூலை முதலமைச்சர் பரிசாக வழங்கியதாக தெரிவித்துள்ள அவர், மாலையில் ஒரு சூரிய உதயம் போல அமைந்தது மெரினா கடற்கரை எனவும், காற்று வாங்க வந்த பொதுமக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியமாக அமைந்தது ஓராண்டு சாதனை மணற்சிற்பம் என குறிப்பிட்டுள்ள அவர், அதனைப் பார்த்து ரசித்து, செல்ஃபி எடுத்து மக்கள் மகிழ்ந்ததாக பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: