ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசும் பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். நிகழ்ச்சிக்குப் பின்பு பொன்னமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, இரண்டு ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், நாளுக்கு நாள் சாதனை செய்து இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளார் என்று கூறினார்.
ஆளுநர் தொடர்பாக பேசிய கி.வீரமணி, ஆளுநர் பதவி என்பது அண்ணா கூறியது போல ”ஆட்டுக்குத் தாடியை போல நாட்டுக்கு கவர்னர்”, ஆளுநர் தேவையில்லை. தற்பொழுது ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
அண்மைச் செய்தி : மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்
மேலும், எங்கெல்லாம் எதிர்க்கட்சியின் ஆட்சிகள் வருகின்றனவோ அங்கெல்லாம் தொல்லை கொடுப்பதற்காக குறுக்கு வழியில் அரசியல் ஆயுதமாக அரசியல் கருவியாக பயன்படுகின்ற முறை தவறான முறை என்றும் அரசியல் சட்டத்திற்கு தவறான முறையாக உள்ள இந்த முறையை தவிர்க்கப்பட வேண்டுமென்றால் ஆளுநர் பதவியே தேவையில்லை என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.







