”டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அரசின் வருவாயை உயர்த்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” -அண்ணாமலை

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அரசின் வருவாயை உயர்த்துவது தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில் மத்திய…

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அரசின் வருவாயை உயர்த்துவது தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில் மத்திய அரசின்
ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிஜேபியின் தமிழக தலைவர் கே அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முன்னாள் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலினை காங்கிரஸ் கட்சியினர் அருங்காட்சியகத்தில் வாக்கிங் ஸ்டிக்-காக வைத்து இருந்ததாகவும், அந்த செங்கோலுக்கு உரிய அங்கீகாரம் அளித்து பிரதமர் மோடி கவுரவப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

திருக்குறளை 23 மொழிகளில் மத்திய அரசு மொழிப்பெயர்த்து தமிழ்மொழிக்கு பெருமைப்படுத்தியுள்ளதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய பல திட்டங்களை பாஜக செய்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் அதிகளவில் பயனடைவதால் திமுக பாஜகவை குறைகூறி வருவதாகவும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடைபெற்று வரும் யுத்தத்தில் பாஜக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், இன்று தமிழக பிஜேபி டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூட வேண்டும் என்று சொல்லி போராடிக் கொண்டு இருக்கிறோம். டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மீண்டும் தென்னை மரம், பனைமரம், கள்ளு ஆகியவற்றை கொண்டு வாருங்கள். இதனால் மீண்டும் விவசாயப் பெருமக்களுக்கு உரிய மரியாதையை தாருங்கள். வருகின்ற 14 ஆம் தேதி மாநில அரசுக்கு நாம் தயாரித்து உள்ள வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பனைமரம் தென்னை மரத்தின் வாயிலாக எப்படி அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். தற்பொழுது உள்ள 44 ஆயிரம் கோடி வருமானம் இதன் முன் ஒன்றும் இல்லை.  என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எனவே பாரதிய ஜனதா கட்சியின் வெள்ளை அறிக்கையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசு வருவாயை ஈட்டுவதற்கு தென்னை மரம் பனைமரம் வாயிலாக கருப்பட்டியில் ஆரம்பித்து பதனி உள்ளிட்ட 17 பொருட்களை உற்பத்தி செய்வது பற்றி
விளக்கப்பட்டுள்ளது. பனைமரம் தென்னை மரம் வந்துவிட்டாலே நிலத்தடி நீர்
பெருகும். நிலத்தடி நீர் அதிகரித்தால் விவசாயிகளின் பாதி பிரச்சனைகள் தீர்ந்து
விடும் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.