டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை!

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா,  கடந்த 2013 ஆண்டு…

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நிலப் பிரச்னை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல்
மருத்துவர் சுப்பையா,  கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை
செய்யப்பட்டார்.  இது தொடர்பான வழக்கில்,  அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில்,  என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார்,  என்ஜினீயர் முருகன்,  செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும்,  பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.  குற்றவாளிகள் தரப்பில், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றும் கொலை,  கூட்டுச் சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில்,  அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என்றும் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில்,  இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில்,  இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - News7 Tamil

குற்றம்சாட்டுகளை காவல்துறையினர் நிரூபிக்க தவறி விட்டதாக கூறி 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும்,  2 பேருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையும் ரத்து செய்து அனைவரும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.