இரட்டை ரயில் பாதை பணி: திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு…

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயில் மற்றும் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயில் ஆகியவை பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.

இதேபோல செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை திருச்சி முதல் திருவனந்தபுரம் வரையிலான இன்டர்சிட்டி ரயில்கள் திருநெல்வேலி முதல் திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட உள்ளது. மேலும், செப்டம்பர் 23ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் மற்றும் செப்டம்பர் 25 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல, செப்டம்பர் 25ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து  கன்னியாகுமரி வரையிலும், செப்டம்பர் 26ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரி வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்தும் இயக்கப்படும். இவ்வாறாக திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் பல்வேறு ரயில்களும் குறிப்பிட்ட இந்த நாட்களுக்கு திருநெல்வேலியில் இருந்து மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.