கொரோனாவால் சட்டமன்ற தேர்தல் ரத்து என்று பரவும் வதந்திகள் உண்மையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பீகார் தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14-ம் தேதி முதல் பீகார் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலை பின்பற்றி, தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக பீகார் தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, பார்வையாளர்களின் அறிவுறுத்தலின்பேரில் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் பீஹாரில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் தொற்று இருந்ததாகவும், தமிழகத்தில் தற்போது 800 என்ற அளவில்தான் தொற்று எண்ணிக்கை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனாவால் தேர்தல் இரத்து என்று பரவும் வதந்திகள் உண்மையில்லை என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.







