மோசடி நிதி நிறுவனங்களில் பண முதலீடு செய்ய வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
எல்என்எஸ் இண்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சம் கட்டினால் மாதம் 8 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி பலரிடம் முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து வேலூர் எல்என்எஸ் இண்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனம் தொடர்பான தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு தனி விசாரணைக் குழுவினர் விசாரித்து வருவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அதிகவட்டி தருவதாகக் ஆசைவார்த்தைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்களில், தங்களுடைய பணத்தினை முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்களின் கடின உழைப்பால் பெறப்பட்ட பணத்தினை முதலீடு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.