இந்தியாவின் கப்பல் கட்டும் துறையால் இந்தியா – அமெரிக்கா பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த இராணுவ தளவாட கப்பல் முதல் முறையாக பழுது நீக்கும் பணிக்காக சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி எல் & டி துறைமுகம் வந்துள்ளது.
அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த இராணுவ தளவாட பொருட்களை ஏற்றி செல்லும் கப்பல் யு.எஸ்.என்.எஸ் சார்லஸ் ட்ரூ. இது கடந்த 2010 ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் தயாரிக்கப்பட்டு இந்திய பசுபிக் கடல் பகுதியில் தனது சேவையை தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய – பசுபிக் கடற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கா கப்பற்படை கப்பல்களுக்கு தேவையான தளவாட உதவிகளை கடந்த பல ஆண்டுகளாக இந்த கப்பல் செய்து வந்திருந்தது. குறிப்பாக உணவு, எரிபொருள், கப்பல் பாகங்கள், மெயில் சேவை உள்ளிட்ட சேவைகள் வழங்கும் கப்பலாக செயல்பட்டு வந்தது. அமெரிக்க படைகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய பசிபிக் பகுதியில் உள்ள பிற நட்பு நாட்டின் கப்பல்களுக்கும் இது போன்ற உதவிகளை சார்லஸ் ட்ரூ செய்து வந்தது.
689 அடி நீளம் கொண்ட இந்த கப்பல், 41 ஆயிரம் டன் பொருட்களை ஒரே சமயத்தில் எடுத்து செல்லும் திறன் கொண்டது. 63 கப்பல் சிப்பந்திகளுடன் செயல்படும் இந்த பிரம்மாண்ட கப்பலில் மளிகை பொருட்கள், எரிவாயு, ஹார்டுவேர், அஞ்சல் வசதியும் உள்ளது. இந்நிலையில் இந்த கப்பல் பழுதடைந்துள்ள காரணத்தால், அதன் பழுதுகளை சரி செய்ய சென்னை வந்துள்ளது.
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான எல்& டி துறைமுகத்தில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல் பழுது நீக்கும் செய்யப்பட உள்ளது. இந்த பணியின் போது, சில பழைய பாகங்கள் சீரமைக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு கப்பல் இந்தியாவில் பழுது நீக்கம் பணிக்காக வந்துள்ளது இதுவே முதல் முறை. இந்த பெருமை மட்டுமல்லாமல், இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள நட்புறவு இந்த நிகழ்வால் மேலும் வலுவடையும் சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், இந்திய – பசுபிக் கடற்பரப்பில் இந்தியா – அமெரிக்கா கப்பற்படைகள் இணைந்து பல முக்கிய பணிகளை செய்து வருகிறது. அரசியல் – பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில், அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள நட்பு அமெரிக்கா ராணுவத்தின் கப்பலை இந்தியாவில் பழுது செய்வதால், மேலும் இணக்கம் அடைந்து வலுபெறும் என கூறப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமாரும் வெளிப்படுத்தியுள்ளார்.
காட்டுப்பாக்கம் எல் & டி துறைமுகத்திற்கு வந்திருந்த சார்லஸ் ட்ரூ கப்பலை இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் நேரில் சென்று வரவேற்று, கப்பலை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர், இந்திய அமெரிக்க இடையிலான உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக கூறிய அவர், இந்திய பசுபிக் கடற்பரப்பில் இரு நாடும் பல முன்னேற்றங்களை இணைந்து அடைந்து வருவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் மேலும் பல அமெரிக்க கப்பல்கள் இந்தியாவில் பழுது நீக்கம் செய்யப்படும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக உறுப்பினர் ஜூடித் ராவின் பேசியுள்ளார். இனி மேலும் பல கப்பல்கள் இந்தியாவில் பழுது நீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக கூறிய அவர் இது, இந்தியா அமெரிக்கா இடையே இந்திய பசுபிக் பகுதியில் நீடித்த, வளமான, அமைதியான சூழல் ஏற்படும் என கூறினார்.
இந்தியா – அமெரிக்கா இடையே நல்லுறவு மேம்படுவது மட்டுமல்லாமல் கப்பல் தொழில் நுட்பத்தில் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில் பேசிய பாதுகாப்புட்துறை செயலாளர் அஜய் குமார், இந்தியாவின் கப்பல் கட்டும் துறை உலக தரத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய கப்பல் மட்டுமல்லாமல், சுவீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களையும் தயாரித்து நாம் வருவதாக கூறியதோடு கடந்த 2015 – 2016ம் ஆண்டில் 1,500 கோடி ரூபாயாக இருந்த இந்த ஏற்றுமதி வர்த்தகம், தற்போது 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இது கடந்த ஏழு ஆண்டுகளில் 80 சதவீத வளர்ச்சியாகும் என கூறினார். இதன் மூலம் கப்பல் கட்டும் துறையில் இந்தியா உலகளவில் முக்கிய நாடாக திகழும் என கூறுகின்றனர்.
- தாமரைச்செல்வன்