”தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது“ – கர்நாடகாவில் பாஜக போராட்டம்

”காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது” என வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு…

”காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது” என வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே  நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி மேலாணமை ஆணையம் அமைக்கப்பட்டபோது  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு  தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக வழங்காத காரணத்தால் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்திலிருந்து தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜகவினர் மாண்டியா, மைசூரு உள்ளிட்ட பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது என முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை ”கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து  தண்ணீர் வழங்கக் கூடாது என்று தெரிவித்திருந்த நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.