“ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட இசை அமைப்பாளர் இளையராஜா அனைவருக்கு சமமானவர். அவரை எந்த அடையாளத்துக்குள்ளும் அடைக்க வேண்டாம்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை
முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக
பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
முதல் SC பட்டதாரி என்ற பெருமைக்குரியவர் சீனிவாசன். இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்டித் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
பள்ளி மாணவர்கள் படிக்கும் வகையில் இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். பாடப் புத்தகங்களை
திருத்தியமைக்கும்போது இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாறை இடம்பெறச் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையை வலியுறுத்துகிறேன்.
இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபத்துக்கு தனி நுழைவு வாயிலை அரசு
ஏற்படுத்தித் தர வேண்டும். மணிமண்டபத்தை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே யார் என்று ஊடகங்கள் தான் கண்டறிய வேண்டும். ஏக்நாத் ஷிண்டேவாக ஒருவர் உருவாவார். ஏக்நாத் ஷிண்டே என்பவர் அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை ; வேறு பெயரிலும் இருக்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 4 பேர் மாநிலங்களவை
உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாரத ரத்னா கிடைக்க வேண்டிய நபர் இசைஞானி இளையராஜா. அவருக்கு எம்.பி., பதவியை குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.
இளையராஜாவுக்கு எம்.பி., பதவி கிடைத்தது, தனக்கு கிடைத்த பதவி என்று
தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் அரசியலைத் தாண்டி வாழ்த்தப்பட வேண்டியவர். அவரை அனைவரும் வாழ்த்த வேண்டும். சாதி, மதங்களைக் கடந்த மாமனிதர். சிங்கமாக, வைரமாக இருக்கிறார் இளையராஜா. அவருக்கு அடையாளம் தேவையில்லை. சொந்த உழைப்பில் மாஸ்ட்ரோ பட்டம் பெற்றவர். அனைவருக்கும் சமமானவர் இளையராஜா. அவரை எந்த அடையாளத்திலும் அடைக்க வேண்டாம்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதும் சரி, தமிழ்நாட்டு அரசை புகழ்ந்ததும் சரி அது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து. இதில் அரசியல் இல்லை தனது பார்வையை இளையராஜா வெளிப்படுத்தி உள்ளார். இளையராஜா தனது சொந்த உழைப்பால் பெற்ற பதவியை கொச்சைப்படுத்தி வருகின்றன எதிர்க்கட்சிகள்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே வெளியேறியதற்கும் பாஜகவுக்கு சம்மந்தம்
கிடையாது, மக்களின் ஆதரவைப் பெற்று, அன்பைப் பெற்று, வாக்குகளைப் பெற்று
ஆட்சிக்கு வருவதே பாஜகவின் விருப்பம். ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் விரும்பவில்லை.
நடராஜர் கோயிலுக்கு மிகப்பெரிய சரித்திரம் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை
அனைவரும் பின்பற்றி வருகின்றனர். இதில் என்ன புதிதாக கண்டுபிடித்தார் இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு? சிதம்பரத்தில் தவறு நடந்திருந்தால் அரசு
தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை ஏன் ஊடகங்களிடம் பேசவேண்டும்? இது திசைதிருப்பும் நடவடிக்கை. ஊடகங்களை சீண்டிவிடுகிறார் அமைச்சர் சேகர்பாபு.
கே.எஸ்.அழகிரி தனது கட்சியை ICU-வில் வைத்து உள்ளார். காங்கிரஸ் கட்சியே பல
பிரிவுகளாக பிரிந்துள்ளது என்று விமர்சனம் செய்த அவர் காங்கிரஸ் கட்சியை
ஒட்டவைக்க பாஜக ஃபெவிகுயிக் வாங்கித்தர தயாராக உள்ளது.
பாஜக உருண்டோ, புரண்டோ, நடந்தோ பாத யாத்திரையை நடத்தும். 2024-ல் 25
எம்.பி.க்களை பாஜக வெல்லும். அதை கே.எஸ்.அழகிரி பார்க்கத்தான் போகிறார் என்றார் அண்ணாமலை.









