“இவர் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று கௌரவம் பார்க்காதீர்கள்” – நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இவர் என்ன அழைப்பது நாம் என்ன போவது என நினைக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று நாகை புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், முதலமைச்சர் இன்று நாகையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,

“தொகுதி மறுசீரமைப்பு பெயரில் மாநில உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது. தமிழநாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

சில கட்சிகள், நாங்கள் வர வாய்ப்பில்லை.. வர முடியாது என கூறியுள்ளன. அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வர முடியாது என்று கூறுபவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட கட்சி பிரச்னையோ, திமுக பிரச்னையோ கிடையாது. இது தமிழ்நாட்டின் பிரச்னை. இது நமது உரிமை. இவர் என்ன அழைப்பது நாம் என்ன போவது என நினைக்க வேண்டாம். இதில் கௌரவம் பார்க்க வேண்டாம். இதை அரசியலாக்க பார்க்காதீர்கள். வர முடியாது என கூறும் கட்சிகள் கண்டிப்பாக வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.