இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் யாசகம் எடுத்த முதியவர் ஒருவர், 10 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி செய்வதற்கு செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏழையாக இருந்தாலும் நல்ல மனமிருந்தால் மற்றவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட முடியும் என்பதை பாண்டியன் என்ற முதியவர் மெய்ப்பித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் தன்னுடைய பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த போதிலும் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டதால் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யாசகம் எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். அதில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை இவர் ஏற்கனவே முதலமைச்சரின் நிவாரண நிதி, கொரோனா நிதி போன்றவற்றுக்கு வழங்கியிருந்தார்.
இந்நிலையில், தனது கொடையுள்ளத்தின் தொடர்ச்சியாக தற்போது அவர் தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு அண்மையில் வந்த அவர், அங்கேயே பதினாறு நாட்கள் தங்கி கோவில் மற்றும் வீடுகளில் யாசகம் பெற்றுள்ளார். அதில் தனக்கான செலவு போக மீதம் சேமித்த பத்தாயிரம் ரூபாயை அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடையாக வழங்கியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்








