திருப்பூரில் சாலை விபத்தில் உயிரிழந்த வளர்ப்பு நாய்க்கு இறுதி மரியாதை செய்து போலீசார் அடக்கம் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இது மாநகராட்சியின் முக்கிய பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் போக்குவரத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி நாய் ஒன்று புறக்காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது. அதன் மீது அன்பு காட்டிய போலீசார் தினந்தோறும் உணவு வழங்கி வந்தனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாய் அங்கேயே வளர்ந்தது. காவலர்கள் வந்தால் நாய் அவர்களுடன் சுற்றி திரியும்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் சென்ற வாகனம் ஒன்று மோதியதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. தங்களுடன் நான்கு ஆண்டுகளாக பயணித்த நாய் இல்லாததால் சோகமடைந்த போலீசார் நாய்க்கு இறுதி மரியாதை செய்ய தீர்மானித்தனர். அதன்படி புற காவல் நிலையம் அருகே குழி தோண்டி நாய் உடலுக்கு இறுதி மரியாதை செய்து போலீசார் அடக்கம் செய்தனர்.







