உடல் கொழுப்பைச் சேகரித்து வைப்பது உடலின் இயல்பு தான். ஆனால், அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வது உடலுக்கே பாதிப்பாக மாறிவிடுகிறது. 2016 உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், 1980-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகில் உடல் பருமன் உள்ளோர் எண்ணிக்கை இரட்டிப்பு அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
உடல் பருமன் ஏற்படக் காரணம் குறித்துப் பேசும் போது, உடல் பருமன் நான்கு காரணங்களால் ஏற்படுகிறது எனக் கூறுகிறார் சித்த மருத்துவர் ஜெய ரூபா. மன அழுத்தம், தைராய்டு, தூக்கமின்மை, இயற்கை மாதவிடாய் நிற்றல் ஆகியவை உடல் பருமன் ஏற்படக் காரணமானவை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மன அழுத்தத்தினால் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்பட்டுள்ளதெனில் உடலின் நடுப்பகுதியில் மட்டும் எடை கூடும். இவர்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்த்து, லேசான உடற்பயிற்சி, சூரிய ஒளியில் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, காலை மற்றும் இரவு உறங்குவதற்கு முன்னர் இனிமையான இசை கேட்பது உள்ளிட்டவற்றைச் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். மேலும், இந்த வித உடல் பருமனுக்கு 100கி ஆளி விதை மற்றும் 10கி சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து தினமும் காலை 1 தேக்கரண்டி பொடியைத் தண்ணீரில் கலந்து பருகினால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும் என்கிறார் மருத்துவர்.
தைராய்டினால் ஒருவருக்கு உடல்பருமன் ஏற்பட்டால் உடல் முழுவதும் எடை கூடும், குறிப்பாக கை பகுதியில் அதிக எடை கூடும். இவர்கள் உடற்பயிற்சியுடன் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்த சதகுப்பை விதைகளை நீரில் கொதிக்க வைத்து தினமும் பருகி வந்தால் உடல் எடை குறையும். சதகுப்பை விதைகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், இல்லையெனில் தனியா விதைகளையும் பயன்படுத்தலாம்.
தூக்கமின்மை பிரச்சனையால் ஏற்படும் உடல் பருமன், வயிற்றுப் பகுதியில் மட்டும் உடல் எடையை அதிகரிக்கும். வயிற்றில் பந்து வைத்துத் தைத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கும். இவர்கள் நடு இரவில் உணவருந்தும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில் மஞ்சள், வேம்பு, கரிசாலை சேர்ப்பதன் மூலம் கல்லீரலின் செயல்திறன் அதிகரித்து உடல் எடை குறையக் கூடும். கரிசாலை சாற்றுடன் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீரில் கலந்தும் பருகலாம்.
40 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இயற்கையாக மாதவிடாய் நிறுத்தல் ஏற்படும். இதுவும் உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் உடல் பருமன் அடி வயிற்றுப் பகுதி மற்றும் தொடைப் பகுதிகளில் எடையை அதிகரிக்கும். துவர்ப்பு சுவை மிக்க உணவுகள், முட்டை கோஸ், காலிஃபிளவர், வெள்ளரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்கிறார் சித்த மருத்துவர் ஜெய ரூபா.
- எழுத்து: சோனியா