முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

கர்ணன் பேசும் அரசியல் சரியா?


சி.பிரபாகரன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கர்ணன்”. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் பரியேறும் பெருமாள் வெற்றிக்குப்பின் மாரிசெல்வராஜ் இயக்கத்திலும், அசுரன் வெற்றிக்கு பின் தனுஷ் நடிப்பிலும் வெளியாகும் திரைப்படம் என்பதாலே ஆகும். மேலும் பலதரப்பட்ட மக்கள் எதிர்பார்த்ததை போலவே கர்ணன் திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பெருவாரியாக பேசுவது போலவே கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் தொடக்க காட்சியிலேயே கர்ணனின் தங்கை வலிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே துடிதுடித்துக் இறப்பது போல காட்சி தொடங்குகிறது. இறந்த தங்கை நாட்டார் தெய்வமாக மாறும் கட்சியில் தொடங்குகிறது மாரி செல்வராஜ் பேசும் அரசியல். படத்தின் பெயர் கர்ணன் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே இத்திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது. கர்ணன் என்ற பெயர் மகாபாரத கதையில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர். அதைப்போல கர்ணன், கண்ணபிரான், துரியோதனன், அபிமன்யு போன்ற மகாபாரத பெயர்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆயினும், மகாபாரத கதை போல் இல்லாமல், இத்திரைப்படத்தில் கர்ணன் கண்ணபிரானை எதிர்ப்பது போலவே கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. “கந்தையா மவன் கண்ணபிரான் ஆகலாம், மாடசாமி மகன் கர்ணனா இருக்க கூடாதா?” என்ற வசனம் அப்பெயர்களின் பின்னால் இருக்கும் அரசியலை காட்டுகிறது. மாடசாமி, குப்புசாமி, கும்புடுறேன்சாமி என்ற பெயர்களுக்கு பின்னும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வரலாறு உண்டு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் பின் தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலை, முழுதாய் வரைந்து முடிக்கப்படாத இம்மானுவேல் சேகரனின் ஓவியம், பன்றிகளை வளர்க்கும் எமராஜா என பல்வேறு குறியீடுகள் மூலம் திரைக்கதையில் மாரி செல்வராஜ் தான் சொல்ல நினைக்கும் அரசியலை திரை மொழி வாயிலாக திறம்பட கூறி இருக்கிறார். கர்ணன் வசிக்கும் ஊரின் பெயர் பொடியன்குளம். இந்த பொடியன்குளம் என்ற பெயர், 1995ல் கொடியன்குளம் கிராமத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டதையே நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அதைப் போலவே இத்திரைப்படத்தில் வரும் பொடியன்குளத்து மக்களுக்கும் ஏற்படுகிறது.

பேருந்து வசதி இல்லாததால் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் எப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதை தெளிவாக பேசியிருக்கிறது இந்த திரைப்படம். ஒரு பேருந்து நிலையத்திற்காக போராட ஆரம்பித்த கதாநாயகன் கர்ணனின் நிலையும், அவனை சார்ந்த அந்த ஊர் மக்களின் மேல் வைக்கப்படும் சாதிய ஒடுக்குமுறைகளையும் தெளிவாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

ஒரு சாதாரண பேருந்து நிலையத்திற்கு இவ்வளவு பிரச்சினையா என்று நாம் எண்ணுவதற்குள் “நாம பஸ் அ ஒடச்சதனால அவன் நம்மள அடிக்கல, நாம அவன் முன்னாடி நிமிர்ந்து நின்னு பேசுனதுக்காக தான் அடிச்சான்” என்ற வசனம், பிரச்சினை பேருந்து நிலையம் அல்ல, அதற்கும் மேலான, சாதிய ஒடுக்குமுறை பார்வையே என்று நமக்கு உணர்த்துகிறது.

அதிகாரத்தில் இருந்தாலும் சாதிய உணர்வாளர்கள் ஒடுக்குமுறையை மக்களின் மீது திணித்துக்கொண்டே தான் இருப்பார்கள் என்பதற்கு கண்ணபிரான் ஒரு நல்ல சாட்சி. “உங்களுக்கு என் தேவை என்னனு முக்கியம் இல்ல, என் பிரச்சினை என்னனு முக்கியம் இல்ல, உங்க முன்னாடி எப்படி குனிஞ்சு நிக்கிறேன், எப்படி பேசுறேன்னு தான் உனக்கு முக்கியமா?” என்ற வசனம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கர்ணனின் வாயிலாக நமக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, பேருந்து என சாதாரண மனிதன் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் சாதிய பார்வை கொண்டு, குறிப்பிட்ட மக்களிடமிருந்து பிடுங்கி, அவர்களை சாதியின் பெயரால் ஒடுக்குவதை, சற்றும் ஏற்க இயலாத கர்ணன், கையில் வாள் ஏந்தி பரியேறிய பெருமாளாக மக்களுக்காக போராடுகிறான். அவன் போராட்டதினால் கிடைக்க பெரும் சமூகநீதியானது சூரியனை போல முளைத்தெழக் கூடியதாக இருக்கிறது.

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது நீண்ட நெடிய வரலாறினை கொண்டது. ஆனால் அப்போராட்டத்தின் வெற்றி இன்றளவும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில், மூன்று மணி நேர திரைப்படத்தில் கதாநாயகனான இளைஞன் கர்ணன் வாளேந்தி வன்முறையினால் தனக்கான உரிமையை பெறுகிறான். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமல்ல. வன்முறை கூடாது என்பதே இங்கு சமூகநீதிக்காக போராடும் பலரது நிலைப்பாடாக இருக்கிறது. எந்த தருணத்திலும், வருங்கால தலைமுறையினர் கையில் ஆயுதம் ஏந்தாத அறப்போராகவே இருத்தலும், கர்ணனை போன்ற‌ தனி மனித வழிபாடு கொண்ட “மீட்பரை” எதிர்பார்க்காமல், மக்களின் போராட்டமாகவே சமூக நீதிக்கான போராட்டம் இருத்தல் வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வங்கதேசத்திற்கு இலவசமாக 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

Gayathri Venkatesan

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்

Web Editor

பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் – அமைச்சர்

Halley Karthik