அரக்கோணத்தில் இரட்டைக் கொலை சம்பவத்திற்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த கொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
ஆர்ப்பாட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “இது திட்டமிட்ட படுகொலை, இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது. இந்த இரட்டை கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “திட்டமிட்டு ஆட்களை திரட்டி ரவுடிகளை கொண்டு இந்த கொலை நடந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி சந்திக்க உள்ளது. இந்த அதிருப்தி காரணமாக இவ்வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. இவ்வன்முறை தொடக்கம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின்போது தொடங்கப்பட்டது. தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சென்ற விசிகவின் தொண்டர்கள் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் மீதான தாக்குதலை எதிர்கொண்ட பின்னரும் விசிகவுக்கு வாக்கு சேகரித்துள்ளனர். அப்போது பானை சின்னதிற்கு எதற்காக வாக்கு சேகரிக்க வருகிறீர்கள், என்று கூறி தாக்கியுள்ளனர். அவர்கள் தலித்துக்கள் என்பதாலேயே தாக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தி வருகிறோம்.” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த அர்ஜுனன் எனும் இளைஞனுக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.