மயிலாடுதுறையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினரை, மருத்துவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கொரோனா தொற்று இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 17,630 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 344 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இறந்தவர் அணிந்திருந்த செயின், மோதிரம், செல்போன் ஆகியவற்றை வழங்குமாறு பணியில் இருந்த மருத்துவரிடம் உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரம், உயிரிழந்தவரின் உறவினர் தன்னை தாக்கியதாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் மருத்துவர் புகார் அளித்துள்ளார்.







