10 அணிகள் மோதும் 15வது ஐபிஎல் சீசன் போட்டி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் ஆட்டங்கள் இன்னும் இரண்டு மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று 69வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. நாளை 70வது லீக் ஆட்டத்தில் சன்ரைசரஸ் ஐதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அதிக ரன்ரேட்டுகள் மற்றும் அதிக புள்ளிகளுடன் இடம்பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
14 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே 4வது இடத்துக்கு முன்னேற முடியும். ஒருவேளை டெல்லி வெற்றி பெற்றால், பெங்களூரு அணி 5ஆவது இடத்துக்கு சறுக்கி, போட்டியிலிருந்து வெளியேறிவிடும். எனவே, இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாகும். 5 முறை சாம்பியனான மும்பை அணி, இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 3 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 10 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள அணி ஆறுதல் வெற்றி பெற, டெல்லி அணிக்கு கடுமையான சவாலைக் கொடுக்கும்.
மும்பை அணியுடன் 2வது லீக் ஆட்டத்தில் மோதிய டெல்லி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, மும்பை அணி டெல்லிக்கு பதிலடி கொடுக்கவும் இந்த ஆட்டத்தில் முனைப்புக் காட்டும். ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி அணி சாதாரணமாக எடை போட்டு விட்டுவிடக் கூடாது. எனவே கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியமாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் இப்போட்டியை நேரலையில் காணலாம். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையாக இந்தப் போட்டி ஒளிபரப்படும்.