போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
உரிய மருந்து சீட்டு இல்லாமல், போதை தரக்கூடிய மருந்துகள் சமீபகாலமாக விற்கப்படுவதாக புகார் எழுந்து வந்தது. இந்த விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு வாரியம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, போதை தரும் மருந்துகளை, தவறான பயன்பாட்டிற்காகவும், மருத்துவரின் உரிய பரிந்துரைச் சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது, மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதி 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும், போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்றும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.







