முக்கியச் செய்திகள் தமிழகம்

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. வெள்ளை அறிக்கை என்றால் என்றால் என்ன? அதன் அரசியல் முக்கியத்துவம் எத்தகையது?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆவேசத்துக்கு காரணமாகியிருக்கும் வெள்ளை அறிக்கை குறித்த பேச்சு இப்போது எழுந்ததல்ல. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைத்தால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 20ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் அப்படியே ஆளுநர் உரையிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் தான், வெள்ளை அறிக்கை என்றால் தமக்கு என்னவென்று தெரியாது என கூறினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

கருப்பு என்பது, ஒன்றை மறைக்க பயன்படுத்தக் கூடிய வார்த்தை என்பதால், அதற்கு மாறாக, முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையாளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பது. தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகால பேசுபொருளாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஜூலை மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் தான், தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புள்ளி விவரங்களுடம் இருக்கும். தமிழகத்தின் வரவு – செலவு கணக்குகள், கடன் அளவு, நிதி இருப்பு உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும் என்பதால், வெள்ளை அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கையின் நீட்சியாக வெளியிடப்படும் இந்த வெள்ளை அறிக்கை, தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசின் நிதி நிலை, கடன் அளவை மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, மக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த வெள்ளை அறிக்கை உதவியாக இருக்கும்.

Advertisement:

Related posts

நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!

Jeba Arul Robinson

மெஸ்ஸியின் கனவு நிறைவேறியது!

Ezhilarasan

கால்வாயில் சிக்கிய கப்பலால் கதிகலங்கும் உலக நாடுகள்!

Gayathri Venkatesan