புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி நிச்சயமாக உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், மாநில திமுக அவைத் தலைவருமான எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமணம் விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கவில்லை. அதனால் தான் எம்.பி தேர்தலில் 40 தொகுதி என்று குறிப்பிடுகின்றோம். தமிழகத்தில் மலர்ந்துள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கின்றோம். அப்படி பட்ட ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தேவை. உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆசைதான் என்றார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான். அது மக்களுக்காக டைபெறுகின்றதா? முதலமைச்சர் ரங்கசாமியை பொம்மை முதலமைச்சராக உள்ளார். அவரை பற்றி குறை கூற விரும்பவில்லை. அவர் நல்லவர் தான். ஆனால் வல்லவர் இல்லையே. ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுவையில் ஆட்சி நடைபெறுகின்றது. இது புதுவை மாநிலத்திற்கு இழுக்காக அமைந்துள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில் தான் புதுச்சேரி திமுக எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் இங்கு திமுக ஆட்சி வரவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி காட்டுகின்றார். ஏற்கனவே புதுச்சேரியில் திமுக பல முறை ஆட்சியில் இருந்தவர்கள் தான். நிச்சயமாக சொல்கின்றேன் திமுக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, மதவாத ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் உருவாக விடக்கூடாது. அதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, அதை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் சரி நாம் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்போதே நீங்கள் பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி, எப்படி கூட்டணி அது எந்த வகையில் அமையப் போகின்றது என்பதை அப்போது முடிவெடுக்கப்படும். ஆனால் வெற்றிக்கு இப்போதே அச்சாரமாக கட்சி பணிகளை ஆற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.







