‘திமுக ஆட்சி; பெண்களின் முன்னேற்றத்துக்கான ஆட்சி’ – தமிழ்நாடு முதலமைச்சர்

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரி, NAAC அமைப்பால்…

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரி, NAAC அமைப்பால் A++ சான்று பெற்றதற்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரிக்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைவதாகவும், முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்த நிலையில், 3 மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதாகவும், கல்லூரிக்கான பாராட்டு விழா என்று தன்னை அழைத்துவிட்டு, தனக்கும் சேர்த்து ஒரு பாராட்டு விழாவை நடத்திவிட்டதாகவும் கூறினார்.

மேலும், தேர்தல் நடைபெறும் போதெல்லாம் இந்த கல்லூரிக்கு வந்துதான் தான் வாக்களித்து வருவதாகவும், தான் முதலமைச்சராக உள்ள நிலையில், அந்த வெற்றிக்கான வாக்குகள் செலுத்திய இடங்களுள் இதுவும் ஒன்று என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர், ஆண்களுக்கென பல கல்லூரிகள் இருந்த நிலையில், இஸ்லாமிய பெண்களுக்கான கல்லூரியாக இந்த கல்லூரி உருவெடுத்துள்ளதாகவும், ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்லூரி இன்று A++ தகுதி பெறுவது கல்லூரி வரலாற்றில் ஒரு மைல் கல் என்றும் குறிப்பிட்டார்.

பக்கத்து தெருக்காரன் என்ற அடிப்படையிலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், 7,500 மாணவியர் பயிலும் கல்லூரியில் 50% இஸ்லாமியர், 50% பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, ஏழை எளிய மாணவியர் என்று மதச்சார்பற்ற கல்லூரியாக இது உள்ளதாகவும், இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்விக்காகவும் உழைக்கும் கல்லூரி இது என்றும் அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘சென்னை விமான நிலைய வளாகத்தில் இறந்த நிலையில் வாலிபர் உடல்’

இந்நிகழ்ச்சியில் நீண்ட நேரம் பங்கேற்று மாணவியருடன் அளவளாவ வேண்டும் என்று தமக்கும் ஆசை இருப்பதாகவும், ஆனால் மேட்டூரில் திறந்துவிட்ட காவிரி நீர் கடைமடை வரை சென்றுவிட்டதா? என்று ஆய்வு செய்ய உடனடியாக திருச்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் உடனடியாக புறப்படுவதாகவும் ஏக்கத்துடன் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக, NAAC வழங்கிய A++ சான்றை, கல்லூரி நிர்வாகத்துக்கு வழங்கி பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியருக்கு விருது வழங்கியும் கௌரவித்தார். ஹிஜாப் சர்ச்சை எழுந்த போது இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தொடர்ந்து அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரி நிர்வாகம் மேடையிலேயே நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.