நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் அதிதீவிர…

மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் அதிதீவிர கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த மிகத் தீவிர மழை 4 மாவட்டங்களையும் புரட்டிப்போட்டுவிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆனது. இதனையடுத்து வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் தமிழக வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழுவும் சென்னை மற்றும் தூத்துக்குடி வந்தது.

இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங்,  நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.  அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களைச் சரி செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு 37,000 கோடி ரூபாய் கோரியது.  பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அனைத்து கட்சி எம்.பி.க்கள் உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினர். இருந்த போதும் மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லையென திமுக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத்திலும் மத்திய அரசுக்கு எதிரான குரல்  எழுப்பியது.

இந்தநிலையில்,   மத்திய அரசைக் கண்டித்தும், வெள்ள நிவாரண நிதி வழங்காததை கண்டித்தும்,  இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும் திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தோழமைக் கட்சிகளும் கருப்பு சட்டை அணிந்து, பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

 

https://twitter.com/niranjan2428/status/1755461834704838845

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.